ராஞ்சி:
சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.
தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் செராய்கெலா - கார்ஸ்வான் மாவட்டங்களுக்கு இடைபட்ட பகுதியில் அமைந்துள்ள மருதங்கா கிராமத்தில் போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டி ஒரு பெண் உட்பட இருவரை நக்சலைட்டுகள் நேற்று சுட்டு கொன்றுள்ளனர். போலீசாருக்கு தகவல் கொடுத்ததற்காக அவர்களை சுட்டுகொன்றதாக பதாகைகளையும் அந்த நக்சலைட்டுகள் விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்தவர் எனவும், மற்றொருவர் யார் என அடையாளம் தெரியவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நக்சலைட்டுகளை பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #Jharkhand #Naxals #policeinformer #tamilnews