மும்பை:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் நாகிபோகு(26), இந்திய கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பொறுப்பேற்கும் இவர் மும்பை அருகேயுள்ள லோனாவாலா பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய கடற்படை கப்பாலான ‘ஐ.என்.எஸ்.சிவாஜி’ போர்க்கப்பலில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீகாந்த் மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்தார். பனுவேல் தாலுகாவுக்கு உட்பட்ட கோன் கிராமம் அருகே உள்ள பட்டான் சுரங்கப்பாதை அருகே பழுதாகி ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரியின் மீது அவரது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தால் பலத்த தலைக்காயத்துடன் துடித்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீகாந்தின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுமார் 95 கிலோமீட்டர் நீளமுள்ள மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்திவைக்க அனுமதி இல்லை. திடீரென்ற ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக விபத்துக்கு காரணமான லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த லாரி ஓட்டுனர் தில்வர் பட்டேல், இதர வாகனங்களுக்கு எச்சரிக்கை சிக்னல் எதையும் தெரிவிக்காததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, லாரி ஓட்டுனர் தில்வர் பட்டேலை கைது செய்துள்ள போலீசார் போக்குவரத்து விதிமீறல் சட்டத்தின்படி, அவர்மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.