செய்திகள்

நிலக்கரி ஊழல் வழக்கில் நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முறைகேடாக சுரங்கங்களை பெற்ற நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு நபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

அவ்வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் உர்தன் வடக்கு நிலக்கரி சுரங்கத்தை முறைகேடாக பெற்றதாக ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன இயக்குனர் நவீன் ஜிண்டால், நிர்வாகிகளான சுஷில் மாரோ, ஆனந்த் கோயல் மற்றும் விக்ராந்த் குஜ்ரால் ஆகியோர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ஜிண்டால் உள்ளிட்ட 4 பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்களை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி, அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT