ராகுல் காந்தி- பிரதீப் பண்டாரி ராகுல் காந்தி- பிரதீப் பண்டாரி
இந்தியா

மீனாட்சி நடராஜன் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி. தேர்தலுக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரின் மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

பாஜக

ஆனால் மீனாட்சி நடராஜன் தெலங்கானா மாநில காங்கிரஸின் பொறுப்பாளராக இருந்தபோது, ஐதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் விவரங்களை வேட்புமனுவில் இருந்து மறைத்துவிட்டார் என்று பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

உச்சநீதிமன்றம தள்ளுபடி

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்தது. இந்நிலையில் இதை எதிர்த்து மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் சந்துர்கர் அடங்கிய அமர்வு, ஒருமுறை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் பணிகள் தொடங்கிவிட்டால், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை நீதிமன்றங்கள் அதில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற முந்தைய உத்தரவை மேற்கோள் காட்டியது.

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மீனாட்சி நடராஜனுக்காக விதிவிலக்குகளை உருவாக்க முடியாது என்றும் தேர்தல் முடிவடைந்த பிறகு உரிய உயர் நீதிமன்றத்தில் முறையிடுவதே இதற்கான ஒரே சட்டப்பூர்வமான வழி. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிடாது என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பாஜக வெற்றி

இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டனர்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மனுவை நிராகரித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுவரை பாஜக வாக்குகளை திருடிக் கொண்டிருந்தது, தற்போது மாநிலங்களவை சீட்டையே திருடிவிட்டது என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டி, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதீப் பண்டாரி கூறியதவாது:-

மீனாட்சி நடராஜன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், ராகுல் காந்தி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் காந்தியின் சொந்தக் கட்சியிலேயே நிலைமை சீராக இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலினாலேயே அவருக்கு விருப்பமான வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.

காங்கிரஸ் தோல்விக்கு வழிவகுத்தது

தெலங்கானாவில் அவரது சொந்த அரசே காங்கிரஸ் வேட்பாளரின் தோல்விக்கு வழிவகுத்தது. ராகுல் பாதிக்கப்பட்டவர் (Victim Card) என்ற நாடகத்தை அதிகமாக நடிப்பதை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களுக்கே இது சலித்துவிட்டது. அவர்களால் இதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரே உண்மை என்னவென்றால், ராகுல் காந்தியின் மாநிலங்களவை வேட்பாளரை காங்கிரஸ் தோற்கடித்தது.

இவ்வாறு பரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.

3 மாநிலங்களவை இடத்திற்கு போட்டி

மத்திய பிரதேச மாநிலத்தில் 3 மாநிலங்களவை இடத்திற்கு போட்டி நிலவியது. இரண்டு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கு போதுமான எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை பாஜக-விடம் இருந்து. ஒரு எம்.பி.யை தேர்வு செய்வதற்கான எண்ணிக்கை காங்கிரசிடம் இருந்தது. இருந்தபோதிலும் பாஜக வேட்பாளரை நிறுத்தியது. இதனால் போட்டி நிலவும் என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.