நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலீஜியம் முறையை உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீதிபதிகளின் நியமனம் அல்லது பதவி உயர்வுக்கான எந்தவொரு காரணமும் வெளிப்படையாக குறிப்பிடப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Vidhi Centre for Legal Policy என்ற சட்ட ஆராய்ச்சி மையம் நடத்திய கலந்துரையாடலில் பேசிய அவர்,
"காரணங்களை வெளிப்படையாக அறிவிக்காததால், சிறப்பாகப் பணியாற்றிய தகுதியான நீதிபதிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் போகிறது.
பொதுமக்களுக்கும் சட்டத் துறைக்கும் ஒரு குறிப்பிட்ட நீதிபதி ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்ள உரிமை உள்ளது.
நியமன நடைமுறையில் தெளிவான காரணங்கள் இல்லாதது, எதிர்காலத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை 'எறும்புகள்' எனக் குறிப்பிடும் அளவுக்கு பொறுப்பற்ற நபர்கள் நீதித்துறைக்குள் நுழைய வழிவகுக்கும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளே அவர்களிடம் இருந்து வெளிப்படும்.
பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைக்க நியமனங்களில் முறையான விவாதமும் வெளிப்படைத்தன்மையும் அவசியம்." என தெரிவித்தார்.
2024 இல் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் குறித்த விசாரணையின் போது, நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் முறை குறித்தும், அதில் அரசின் தலையீடு குறித்தும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நீதிபதிகள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.