2026-ம் ஆண்டுக்கான UG மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவடைந்த நிலையில், தேர்வில் இடம் பிடித்திருந்த பெரும்பாலான வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள் கசிந்து பரபரப்பை ஏற்பட்டுத்தியது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகிற 21-ந்தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வினாத்தாள் கணினி மூலம் திருத்தப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார். மோடி அரசு அவரை பதவி விலக கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. ஆனால் தர்மேந்திர பிரதானை பதவி விலக பாஜக அரசு வலியுறுத்தவில்லை.
திடீரென இணையதளம் மூலம் பிரபலமான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்வரை ஓயமாட்டோம் எனத் தெரிவித்து டெல்லி மற்றும் ஐதராபாத்தில் போராட்டம் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய கேட்காததன் மூலம் பொறுப்புக்கூறலின் (பொறுப்பேற்பு- accountability) முதல் சோதனையிலேயே பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
நீட் மறு தேர்வுக்காக தற்காலிகமாக டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை தடை செய்ய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய மோடி ஜி முதலில் வலியுறுத்த வேண்டும்.
இந்திய விமானப்படையை களமிறக்குவதோ, டெலிகிராம் (Telegram) செயலியை முடக்குவதோ அல்லது வினாத்தாள் கசிவு மாஃபியாவைக் காப்பாற்றச் சிறிய மீன்களை மட்டும் பிடிப்பதோ, இவை அனைத்தையும் மோடி அரசு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் 90 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன, மேலும், இந்த மோசடி மற்றும் ஊழலால் 9 கோடி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு தனது தோல்விகளை எவ்வளவு காலத்திற்குத்தான் மூடிமறைக்கப் போகிறது?
மோடி ஜி இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை. பல ஆண்டுகளாக தேர்வுக்காக பெற்றோர்கள் கடன் வாங்கிச் செலவழித்த எண்ணற்றவர்கள் உள்ளனர். ஆனால், NEET, SSC, UGC-NET, CUET மற்றும் பிற தேர்வுகளின் வினாத்தாள்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கசிந்து வருகின்றன.
விழிப்புணர்வுள்ள நாட்டின் இளைஞர்கள் ஒரே ஒரு விஷயத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள், அது தர்மேந்திர பிரதானின் பதவி விலகல். இதுவே பொறுப்பேற்தற்கான முதல் சோதனையாகவும் மாறியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பாஜக இந்தச் சோதனையில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது.
இவ்வாறு மல்லிகார்ஜு கார்கே குறிப்பிட்டுள்ளார்.