இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வை இன்று நாடு முழுவதும் சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதியம் 2:00 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5:20 மணி வரை நடைபெறும்.
மாணவர்கள் காலை 11 மணி தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். அதன் பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எடுத்துச் செல்ல வேண்டியவை:
புகைப்படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட் (கையெழுத்துடன்), புகைப்பட அடையாள அட்டை (ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்களர் அட்டை, ஒட்டுநர் உரிமம்), 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், transparent தண்ணீர் பாட்டில்
எடுத்து செல்ல கூடாதவை:
பெல்ட், தொப்பி, பை, பேனா, பேப்பர், பென்சில் பாக்ஸ், கைபேசி, ப்ளூடூத், வாட்ச், அணிகலன்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. தாலி உள்ளிட்ட நம்பிக்கை சார்ந்தவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆடை கட்டுப்பாடுகள்:
அரைக் கை லேசான ஆடைகள், அவசியம் இருப்பின் முழுக் கை ஆடைகள், கம்பளி ஆடைகள் அணியலாம், ஸ்லிப்பர், Low heel செருப்பு அணியலாம். தடிமனான அடிப்பாகம் கொண்ட காலணிகள் மற்றும் பூட்ஸ் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப், கிர்பான் போன்ற மத நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணிந்து வருபவர்கள், கூடுதல் சோதனைக்காக 12:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.