அகமதாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் பணிபுரியும் பெண் விற்பனையாளர் ஹர்ஷிதா ஷெட்டி கடந்த 11 மாதங்களாக அந்த கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த திங்களன்று அவசர வேலை காரணமாக உரிமையாளர் விடுப்பு அளித்ததாக சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, அவர் மாலை சுமார் 4.30 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அன்று மாலை தங்க பிரேஸ்லெட் ஒன்று காணாமல் போனதை ஊழியர்கள் கவனித்தபோது இந்த திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் ஷோரூம் உரிமையாளர் தர்ஷன்பாயிடம் ஹர்ஷிதா தெரிவிக்காமல் சென்றதும் தெரிய வந்தது.
பின்னர் நடத்தப்பட்ட முழுமையான சோதனையில், சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இதர ஆபரணங்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், ஹர்ஷிதா தனது நகைகளை தனது சீருடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறுவது பதிவாகி இருந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்ததில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷிதா போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.