கர்நாடகாவின் மடிகேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரோஷன் பாலகிருஷ்ணன்.
சமீபத்தில்தான் தனது ஐடி துறை வேலையை விட்டுவிட்டு, தனது நண்பர் ஒருவருடன் இணைந்து விவசாயத் துறையில் ரோஷன் கால் பதித்தார்.
நவீன விவசாயக் கருவிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் அவற்றின் சந்தைப்படுத்துதல் போன்ற புதுமையான வேளாண் வணிகச் செயல்பாடுகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
தனது விவசாயத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக, நிலத்தை ஆய்வு செய்யத் தனது குடும்பத்தினருடன் ரோஷன் மைசூருவிற்கு வந்திருந்தார்.
மே 27 அன்று விவசாய நிலத்தில் அவர் நின்றுகொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு மரத்தில் இருந்து மாம்பழம் பறிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்னல் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே ரோஷன் பாலகிருஷ்ணன் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது ரோஷனின் மனைவியும் குழந்தையும் அதே நிலத்தில் சற்று தொலைவில் இருந்தனர்.
மேலும், ரோஷனுடன் அருகிலிருந்த மற்றொரு நபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்த ரோஷன் பாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு மைசூரு மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், பலத்த மழை மற்றும் இடிமின்னல் ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் யாரும் மரங்களின் அடியிலோ அல்லது திறந்தவெளிகளிலோ நிற்க வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் சாதிக்கத் துடித்த இளைஞரின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரிடையேயும் அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.