இணையத்தில் வைரலாகி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து நாளிதொன்றில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர், "இன்ஸ்டாகிராம் என்பது உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளம் மட்டுமே. ஆனால், அது நீங்கள் வாக்களிக்கும் வாக்குப்பெட்டி கிடையாது.
வெறும் சமூக ஊடகப் போராட்டங்களால் மட்டுமே நாட்டில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது.
நாட்டின் ஜனநாயக அமைப்பிற்குள் அதிகாரப்பூர்வமாகப் பங்கெடுப்பதன் மூலமே நிரந்தர மாற்றத்தைச் சாத்தியமாக்க முடியும்.
வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வுகளை நடத்துவதில் நிலவும் குளறுபடிகளால் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஏமாற்றமும் கோபமும் முற்றிலும் நியாயமானதுதான்.
ஆனால், அந்தக் கோபத்தை வெறும் ஆன்லைன் கேலி கிண்டல்களோடு சுருக்கிக் கொள்ளாமல், சட்டப்பூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளில் பயன்படுத்த வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்புவது, மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கம் கேட்பது போன்ற முறையான செயல்பாடுகள் மூலமே சிஸ்டத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முடியும்.
இளைஞர்கள் தங்களின் எதிர்ப்புகளை வெறும் கோஷங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒரு முறையான வழிமுறையைப் பின்பற்றி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
மாணவர் சங்கங்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பு அமைப்பிகளுடன் இணைந்து செயல்பட்டு, அரசுக்கு வலுவான அரசியல் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
உங்களுடைய கோபம் ஏமாற்றமாகவோ அல்லது விரக்தியாகவோ மாறிவிடக் கூடாது. உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய மக்கள் பலம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு, நீண்ட கால மாற்றத்திற்காகப் போராடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.