இந்தியா

ஆந்திராவில் காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் அடித்துக் கொலை

வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்த இளம்பெண்ணின் பெற்றோர் இரவு 10:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். பலமுறை கதவைத் தட்டியும் திறக்கவில்லை.

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் எர்ரகொண்ட பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு ( வயது 21). இந்திரம்மா காலனியை சேர்ந்தவர் வெங்கட நாராயணா. இவரது மனைவி ரமணா. தம்பதியின் மகளும் ஆஞ்சநேயலுவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் ஆஞ்சநேயலு காதலியின் வீட்டுக்கு சென்றார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர்.

வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்த இளம்பெண்ணின் பெற்றோர் இரவு 10:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். பலமுறை கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். மகளும், ஆஞ்சநேயலுவும் உல்லாசமாக இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தாய் ரமணா ஆஞ்சநேயலுவின் தலையில் கட்டையால் தாக்கினார். ஆஞ்சநேயலு திருப்பி தாக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட கணவன், மனைவி இருவரும் ஆஞ்சநேயலுவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஆஞ்சநேயலு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து இருந்தனர்.

பின்னர் கணவன், மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து ஆஞ்சநேயலுவின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள பள்ளிக்கு பின்புறம் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றில் உடல் பாகங்களை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தனர்.

ஆஞ்சநேயலுவை காணவில்லை என வெங்கட் ராவ் என்பவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் இளம்பெண்ணின் பெற்றோர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆஞ்சநேயலு தனது மகளுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக தெரிவித்தனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.