priyanka gandhi. 
இந்தியா

இளைஞர்கள் நம் நாட்டை மீட்டெடுத்துள்ளனர் - பிரியங்கா காந்தி பூரிப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது சித்தாந்தத்தால் நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் ஆக்கிரமிக்க முயல்கிறது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.

பிரியங்கா பேட்டி

வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "கடந்த 10-12 ஆண்டுகளாக நமது நாட்டின் இளைஞர்கள் எப்போது விழித்துக் கொள்வார்கள், குரல் எழுப்புவார்கள் என்று நான் பலமுறை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டதுண்டு.

இன்று நாட்டின் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் குரலை உரக்கப் பதிவு செய்துள்ளனர். அவர்களின் குரல் அரசுக்குக் கேட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது சித்தாந்தத்தால் நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் ஆக்கிரமிக்க முயல்கிறது. நமது முன்னோர்களின் கொள்கைகள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அரசு தனது அதிகார பலத்தைப் பிரயோகித்தது.

ஆனால், ஆட்சியாளர்களை விட மக்களே நாட்டின் மிக உயர்ந்த சக்தி என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. இன்று நமது நாட்டை இளைஞர்கள் மீட்டெடுத்துள்ளனர்." என தெரிவித்தார்.

ராகுல் சொன்னது என்ன?

முன்னதாக தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தி, இன்னும் இரண்டு கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாக தெரிவித்தார்.

அதாவது, குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் வன்முறையை பிரயோகித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிஜேபி நிலைப்பாடு

இதனிடையே மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தங்கள் பிரதான கோரிக்கையாக கொண்டு போராடிய நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.

அதேநேரம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT