காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் கலந்துள்ள உள்ள ஆயிரக்கணகான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தங்களை பாஜக அரசு அச்சுறுத்த முயற்சிப்பதாகவும் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி சிஜேபி கட்சி அக்டோபர் 10 அன்று ‘சலோ டெல்லி’ என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சிஜேபி அறிவிப்பை தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாகவும், அனுமதியற்ற கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் ஸ்ரிஷ் பாண்டே கூறுகையில், கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை டெல்லி ஜந்தர் மந்தரிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ போரட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சிஜேபி அறிவித்துள்ள போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் எனவும், தயவுசெய்து உங்கள் சொந்த பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, உங்கள் குடும்பங்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டங்களை அச்சுறுத்த பாஜக அரசு முயற்சி செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அக்டோபர் 10 போராட்டத்திற்கு முன்னதாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை பாஜக அரசு தடுத்து வைத்துள்ளது.
மோடி அவர்களே இந்த மிரட்டல் எடுபடாது. இந்த நாட்டின் இளைஞர்கள் இனி உங்களுக்கு பயப்பட மாட்டார்கள்.
நான் நாளை டெல்லியில் தரையிறங்குவேன், என்ன நடந்தாலும் சரி, ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணி செல்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக எக்ஸ் தளத்தில் தீப்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், பெங்களூருக்கு பயணம் செய்தபோது தன்னை வரவேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
அவர் அந்த பதிவில், தன் இதயத்தில் மிகுந்த அன்புடன் பெங்களூருவை விட்டு புறப்படுவதாகவும், கடந்த இரண்டு நாட்களில் தான் பெற்ற அரவணைப்பும், பாசமும், கருணையும் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுவதாகவும் பதிவிட்டார்.
மேலும் அவர், கவிதா லங்கேஷ் மற்றும் இஷா லங்கேஷ் ஆகியோரைத் தனது புதிய குடும்பம் என்று குறிப்பிட்டு, அவர்களை மீண்டும் பெங்களூரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
இதையடுத்து தன்னை பெங்களூருக்கு அழைத்து, அந்த நகரின் அன்பையும் பெருந்தன்மையையும் தனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் தனது மூத்த சகோதரியான ஆஃப்ரீன் நவாஸ் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.