இந்தியா

கடன் வலையில் சிக்கும் இளைய தலைமுறை - 5 ஆண்டுகளில் 65 சதவீதம் அதிகரிப்பு

புதிய கடன்களைப் பெறுவதில் இளைஞர்களே முன்னிலையில் உள்ளனர்.

'ஜென் இசட்' தலைமுறை என்று சமீப காலங்களில் அழைக்கப்படும் இளம் தலைமுறையினர்.

சேமிப்பை விட கடன் வாங்குவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை வாழ்க்கை முறை கருவியாக ஏற்றுக் கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரபல கிரெடிட் ப்யூரோவான சி.ஆர்.ஐ.எப்.ஐ.மார்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மொத்த கடன் வாங்குபவர்களில் நான்கில் ஒரு பங்கினர், அதாவது 23 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். கடந்த 2021-ம் ஆண்டில் + கோடியாக இருந்த இவர்களின் எண்ணிக்கை, 2025-ல் 6.6 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் 65 சதவீத வளர்ச்சியாகும்.

அதேபோல், புதிய கடன்களைப் பெறுவதில் இளைஞர்களே முன்னிலையில் உள்ளனர். 2025-ம் ஆண்டில் பெறப்பட்ட புதிய கடன்களில் 53 சதவீதம் 30 வய திற்குட்பட்டவர்களால் வாங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் வாங்கும் கடன்களில் பெரும்பாலானவை எவ்வித அடமானமும் இல்லாதவை. அவர்கள் வாங்கும் கடன்களில் 29.3 சதவீதம் தனிநபர் கடன், 23.2 சதவீதம் நுகர்வோர் பொருட்கள் கடன். 15.5 சதவீதம் கிரெடிட் கடன் ஆகியவற்றை வாங்கி உள்ளனர்.

ஆனால் எதிர்கால சொத்தாகக் கருதப்படும் வீட்டுக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை இளைஞர்களிடையே வெறும் 0.9 சதவீதமாக மட்டுமே உள்ளது.

2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், இளைஞர்களின் மொத்த கடன் மதிப்பு 102 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மூத்த தலைமுறையினரின் கடன் வளர்ச்சியை 98 சதவீதம் விட அதிகமாகும். குறிப்பாக சிறிய அளவிலான கடன்களைப் பலமுறை வாங்கும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.

ஒரு இளைஞரின் சராசரி கடன் தொகை ரூ.2.7 லட்சமாக இருக்கும் வேளையில், அவர் சராசரியாக 2.4 முறை கடன் பெறுகிறார். இருப்பினும், இந்தத் தலைமுறையினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். 31 முதல் 90 நாட்கள் வரை தவணை செலுத்தத் தவறுபவர்களின் விகிதம் இளைஞர்களிடையே 2.7 சதவீதமாக உள்ளது. இது மூத்த கடனாளிகளை விட 2.2 சதவீதம் அதிகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.