குஜராத்தில் டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக ஒரு வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டில் இருந்த இளம்பெண் ஒருவர், அந்த இளைஞரின் கையில் ராக்கி கயிறு கட்டிவிட்டு பின் அவரின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்.
இதையடுத்து இளைஞர் அந்த பெண்ணுக்கு ரூ.50 தருவதும், அந்த பணத்தை அந்த பெண் வாங்கி கொள்வதுமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.
இந்தியாவில் சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட போது, குஜராத் வதோதரா நகரில் உள்ள ஒரு இளம்பெண் வீட்டிற்கு ஒரு இளைஞர் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றார்.
அப்போது அந்த நபர் கதவை தட்டியபோது, ஒரு இளம்பெண் கதவை திறந்து அவரை வரவேற்று கையில் ராக்கி கயிறு கட்டினார். இதையடுத்து அந்த பெண், இளைஞரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர், தனது பாக்கெட்டில் இருந்து ரூ.50 எடுத்து அந்த இளம்பெண்ணிடம் கொடுத்தார். மேலும் அந்த இளம்பெண்ணிடம் பணத்தை கொடுக்கும்போது, நான் உன்னை சகோதரி என்று அழைத்தேன், எனவே பணத்தை வாங்கிகொள்ளும்படி கூறினார்.
இந்த அழகிய நிகழ்வு பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரக்ஷா பந்தன் அன்று நடந்த இந்த நிகழ்வு குறித்து, பயனர்கள் பல்வேறு கருத்துகளை வலைதளத்தில் பதிவிட்டனர்.
அதில் ஒரு பயனர், சில பரிசுகள் வெறும் 50 ரூபாயாக இருந்தாலும், அவை விலைமதிப்பற்றவை என பதிவிட்டார். மேலும் இந்த 50 ரூபாய் ஒரு நினைவு, ஒரு ஆசீர்வாதம், மேலும் சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த ஒருவரிடமிருந்து கிடைத்த தூய்மையான அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என்றும் அவர் பதிவிட்டார்.
இதையடுத்து மற்றொரு பயனர், டெலிவரி வேலையில் 30 ரூபாய் சம்பாதிப்பதே எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும், ஆனால் அவர் உங்களுக்கு 50 ரூபாய் கொடுத்திருக்கிறார். அது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்று பதிவிட்டார்.
மேலும், இதை பார்க்கும்போது நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். இது பணத்தைப் பற்றியது அல்ல; நீங்கள் ராக்கி கட்டும்போது அவரது முகத்தில் தெரியும் அன்பும் மகிழ்ச்சியுமே முக்கியம். இது ஒரு நிறைவான மற்றும் மனதைத் தொடும் தருணம் என்று அவர் பதிவிட்டார்.
மற்றொரு பயனர், உனக்கு எது தேவைப்பட்டாலும் என்னை அணுகு, நான் இப்போது உன் சகோதரன் என்று அவன் அழகாக சொன்னதை கேட்டதும் தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாகவும், அந்த இளைஞரின் வார்த்தை, அவரின் இதயம் எவ்வளவு பெரியது என்பதைக் காட்டியதாகவும் ஒரு பயனர் பதிவிட்டார்.