கேரளம் மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், கடும் வயிற்றுவலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
இந்தநிலையில் அன்றைய தினம் இரவு மருத்துவமனை கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை கழிவறையின் காற்றோட்ட ஜன்னல் வழியாக வீசிவிட்டு, தான் சேர்ந்திருந்த வார்டுக்கு சென்று படுத்துக் கொண்டார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் பிறந்த குழந்தை கிடந்ததை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தையை மீட்டு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார்டில் சேர்த்தனர். அது யாருடையது? என்பது தெரியாமல் ஊழியர்கள் தவித்தனர்.
வார்டில் இருந்த பெண்களிடம் விசாரித்ததில், அந்த குழந்தையை பெற்றெடுத்தது வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த எர்ணாகுளம் இளம்பெண் பெற்றெடுத்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண் குழந்தையை பெற்றெடுத்து வீசியது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து பெற்றெடுத்த குழந்தையை வீசிய இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு கர்ப்பமான விவரம் தெரியாது எனவும், ஏதாவது பிரச்சனை காரணமாக வயிறு வலிப்பதாக மருத்துவமனைக்கு வந்ததாகவும், கழிவறைக்கு சென்ற போது தனக்கு குழந்தை பிறந்ததாகவும், அதனை கழிவறையின் காற்றோட்ட ஜன்னல் வழியாக வீசிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணிடம் மேலும் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்ணை பற்றியும், அவர் கர்ப்பமானதற்கான காரணம் குறித்த தகவல்களும் வெளியாகின. பெற்றெடுத்த குழந்தையை வீசியெறிந்த அந்த இளம்பெண், கல்லூரி ஒன்றில் படித்து வந்திருக்கிறார். அப்போது அவர் பகுதி நேரமாக ஒரு இடத்தில் வேலையும் பார்த்திருக்கிறார். அப்போது அங்கு வேலை பார்த்த புலம்பெயர் தொழிலாளியான வேறு மாநில வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த வாலிபருடன் உறவில் இருந்திருக்கிறார். இந்தநிலையில் சில காலத்திற்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். நெருங்கி பழகிய வேறு மாநில வாலிபரால் தான் கர்ப்பமானதை அறியாத அந்த இளம்பெண், உறவில் இருந்த அந்த வாலிபரை பிரிந்து பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அப்போது அவரது அடிவயிற்றில் வீங்கி வந்ததால், ஏதாவது கட்டி வளர்ந்துவரும் என்று இளம்பெண் நினைத்திருக்கிறார். இளம்பெண்ணின் தாய் மனநிலை பாதித்து இருக்கிறார். அவரது தந்தை மற்றும் சகோதரி உடனிருந்தாலும் இளம்பெண்ணின் உடல் மாற்றத்தை சரியாக பார்க்காமல் இருந்துள்ளனர்.
அவர்களிடம் தனது நாள்பட்ட வயிற்று நோய்க்கு சிகிச்சை பெறவேண்டி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டே, வந்தனம் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு வைத்து குழந்தையை பெற்றெடுத்த அந்த இளம்பெண், தனது குழந்தையை வீசியெறிந்திருக்கிறார்.
இந்தநிலையில், தான் பெற்றெடுத்த குழந்தை தனக்கு வேண்டாம் என்றும், அந்த குழந்தையை வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை எனவும் குழந்தைகள் நலக்குழுவிடம் அந்த இளம்பெண் கூறி விட்டார்.
தற்போது அந்த குழந்தை ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தையின் தாயான அந்த இளம்பெண் அதே மருத்துவமனையில் போலீசாரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் பெற்ற குழந்தையை வீசியெறிந்த இளம்பெண்ணின் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளனர்.