இந்தியா

கொச்சியில் கார் மோதிய விபத்தில் பலியான தந்தை இறந்த சோகம் மறையாத நிலையில் ஓட்டலை மீண்டும் திறந்த இளம்பெண்

எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தக் கடை தான் எங்களுக்கு முக்கிய வருமானமாக உள்ளது.

கொச்சியில் கார் விபத்தில் தந்தையை இழந்த சோகத்தையும் பொருளாதார சவால்களையும் சமாளிக்க, தந்தை நடத்திய ஓட்டலை மீண்டும் திறந்த பத்ரா கீர்த்தி, தனது தன்னம்பிக்கையால் குடும்பத்தை நிலைநாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலான இந்த முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து ஆதரவும் பாராட்டும் குவிந்து வருகிறது.

கேரளம் மாநிலம் கொச்சி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய பாலகிருஷ்ணன். இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வந்தார். மனைவி, மகள் என்ற சிறிய குடும்பத்தின் தேவைக்கு இந்த ஓட்டல் பெரும் அளவில் கை கொடுத்து வந்தது.

போராட்டம்

இந்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி, 17 வயது சிறுவன் நெடும்பாசேரி விமான நிலைய சாலையில் வேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில் ஜெயபாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தால் ஜெய பாலகிருஷ்ணன் குடும்பம் நிலை குலைந்தது. அவர்கள் தந்தையின் சாவுக்கு நீதி கேட்டு சட்டப் போராட்டத்தில் இறங்கினர்.

அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள், நாளடைவில் கரைந்து போக, ஜெயபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் வறுமையில் வாடினர். இதனை தொடர்ந்து தந்தை நடத்திய ஓட்டலை திறக்க முடிவு செய்தார் அவரது மகள் பத்ரா கீர்த்தி. ஐதராபாத்தில் உணவுப் பொருட்களின் தர ஆய்வாளராக பணியில் இருந்த அவர், அதனை துறந்து ஊர் திரும்பினார். பின்னர் தனது தாயார் பிந்துவுடன் கலந்து பேசினார். தொடர்ந்து தந்தை இறந்த துயரம்... கண்களில் காயாத கண்ணீர் துளிகள் ஆகியவற்றுடன் ஓட்டலை திறந்து மீண்டும் வியாபாரத்தை தொடங்கினார் பத்ரா.

ஓட்டல் திறப்பு

இந்த சூழல் குறித்து பத்ரா கீர்த்தி கூறுகையில், தந்தை இறந்த விபத்தின் நீதிக்காக நாங்கள் போராடி வருகிறோம். இந்த விஷயத்தில் நீதித்துறையை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பதால் வழக்கை கவனமுடன் கையாண்டு வருகிறோம். ஒரு நாள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவோம்.

அதேநேரம் எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தக் கடை தான் எங்களுக்கு முக்கிய வருமானமாக உள்ளது. அதற்காக தான் எனது தந்தை நடத்திய ஓட்டலை திறந்துள்ளோம்.

இந்த ஓட்டலுக்கும் எனக்கும் 26 ஆண்டு கால பந்தம் உள்ளது. அந்த உணர்வுபூர்வமான தொடர்பு கொடுத்த தெம்பால் கடையை நடத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். தந்தையை இழந்த துக்கம் ஒருபுறம் வாட்டினாலும், தனது குடும்பம் வறுமையில் வாடி விடக் கூடாது என்பதற்காக தந்தையின் இறுதிச் சடங்குகள் முடிந்த சில நாட்களிலேயே, கண்ணீரைத் துடைத்துவிட்டு தனது தந்தையின் உணவகத்திற்குச் சென்ற பத்ரா, சமையல் மற்றும் வியாபார பொறுப்புகளை முன்நின்று கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

திரளாக ஆதரவு

தந்தையின் கனவையும், குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அவர் எடுத்துள்ள முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டும் ஆதரவும் பெருகி வருகிறது.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானதால், அவருக்குத் தோள் கொடுக்கும் விதமாக உள்ளூர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் அந்த உணவகத்திற்குத் திரளாக சென்று உணவு அருந்தி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சோகமான விபத்தால் சிதைந்து போயிருக்க வேண்டிய குடும்பத்தை, தனது தன்னம்பிக்கையால் மீட்டெடுத்துள்ள அந்த மகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT