இந்தியா

திருச்சூர் சிறப்பு பள்ளியில் ‘ஆட்டிசம்’ பாதித்த வாலிபர் அடித்துக்கொலை- பராமரிப்பாளர் அதிரடி கைது

ஸ்ரீநாத் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் வடக்கேநாடா பகுதியில் "ஆட்டிசம்" பாதித்தவர்களை பராமரிக்கக் கூடிய சிறப்பு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 'ஆட்டிசம்' பாதித்த சிறுவர்கள்- வாலிபர்கள் என 8 பேர் வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு பாலக்காடு மாவட்டம் கண்ணம்பாரா பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்றவரின் மகன் ஸ்ரீநாத் சேர்க்கப்பட்டிருந்தார். 35 வயது வாலிபரான அவர் சிறு வயதிலேயே 'ஆட்டிசம்' பாதித்திருந்தார். இந்தநிலையில் கொடுங்கல்லூர் வடக்கேநாடாவில் செயல்பட்டு வரும் சிறப்பு பள்ளியில் அவரது குடும்பத்தினரால் கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி சேர்க்கப்பட்டார்.

அங்குள்ள ஊழியர்கள் ஸ்ரீநாத்தை கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை வாலிபர் ஸ்ரீநாத் தனது படுக்கை அறையில் அசைவற்ற நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர் கொடுங்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

‘ஆட்டிசம்' பாதிப்பு இருந்ததால் ஸ்ரீநாத் இயற்கையாக இறந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. இருந்தபோதிலும் சிறப்பு பள்ளியில் பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இறந்து கிடந்ததால், அவரது சாவில் மர்மம் எதுவும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஸ்ரீநாத்தின் குடும்பத்தினரும் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவே போலீசில் புகார் அளித்தனர்.

ஆகவே ஸ்ரீநாத்தின் உடலை போலீசார் கைப்பற்றி திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதையடுத்து ஸ்ரீநாத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது உடலில் இயற்கைக்கு மாறான காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

அதாவது ஸ்ரீநாத்தின் விலா எலும்பு உடைந்து நுரையீரலுக்குள் ஊடுருவி இருந்தது. மேலும் உடல் முழுவதும் தடியால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் மற்றும் தழும்புகள் இருந்தன. ஆகவே ஸ்ரீநாத் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஸ்ரீநாத் சாவுக்கு காரணமானவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அவர் சேர்க்கப்பட்டிருந்த சிறப்பு பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பணிபுரியக்கூடிய அனைத்து ஊழியர்களிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

முக்கியமாக ஸ்ரீநாத்தை பராமரித்து வந்த சிறப்பு பள்ளியின் பராமரிப்பாளரான திருவனந்தபுரம் வெட்டுத்துறை பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது24) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவரது நடத்தை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

ஆகவே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீநாத்தை கட்டையால் சரமாரியாக அடித்துக்கொன்றதை மகேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் ஸ்ரீநாத் சிறப்பு பள்ளியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரை மகேஷ் தான் பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஸ்ரீநாத்தை கட்டையால் கொடூரமான முறையில் சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். ஆனால் அவர் ஸ்ரீநாத்தை எந்த காரணத்துக்காக எதற்காக வெறி பிடித்தவாறு கட்டையால் சரமாரியாக அடித்து துடிதுடிக்க கொலை செய்தார்? என்பது மர்மமாக உள்ளது.

அது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 'ஆட்டிசம்' பாதித்த வாலிபரை அந்த பள்ளியின் பராமரிப்பாளரே அடித்து கொலை செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.