ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பிரட்டத்தூரை சேர்ந்தவர் கிரண். இவரது மனைவி பத்மஜா. இவர் குண்டாக இருந்ததால் கிரணுக்கு அவரை பிடிக்கவில்லை. மேலும் பத்மஜா கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த கிரண் தன் மீது சந்தேகம் வராமல் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். மனைவியை எப்படி கொலை செய்வது என்பது குறித்து யூடியூபில் பார்த்து வந்தார். விஷம் வைத்து கொலை செய்தால் சந்தேகம் வராது என தெரிந்து கொண்டார்.
ஐதராபாத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் கொடுத்து ஆன்லைன் மூலம் விஷம் வரவழைத்தார். பால்கோவாவில் விஷம் கலந்து மனைவிக்கும் கொடுத்தார். அதனை சாப்பிட்ட பத்மஜா மயங்கி விழுந்தார்.
பின்னர் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து மூச்சு அடைக்க வைத்து துடிதுடிக்க கொலை செய்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த கிரண் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
பத்மஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பத்மஜாவின் உடலில் எந்த காயமும் இல்லாததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் கிரணை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் கிரணை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மனைவி குண்டாக இருந்த காரணத்தினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.