மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 19 ஆண்டுகளாக சைக்கிள் மூலம் 191 நாடுகளை சுற்றிவந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்த சம்பவம் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு பர்கானாஸை சேர்ந்த சோமன் தேப்நாத் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு மே 27 அன்று தனது உலக சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
இவர் தனது சர்வதேச சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.
இதையடுத்து இவர் முதன் முதலில் டெல்லிக்கு சென்ற போது, அங்கு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களை சந்தித்தார்.
மேலும் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் சோமன் தெரிவித்தார்.
இதன்மூலம் ஐந்து நாடுகளுக்கு செல்வதற்கான சர்வதேச விசாவும், 50,000 ரூபாய் பணமும் கிடைத்ததாக சோமன் தெரிவித்துள்ளார்.
இவர் 2004 முதல் 2009 வரை, நேபாளம், திபெத், சீனா, பூட்டான், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பயணம் செய்தார்.
அவருடைய பயணம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ஈரான், துருக்கி, ஜார்ஜியா மற்றும் பல்கேரியா வழியாகவும் சென்றது.
இதையடுத்து 2009 முதல் 2012 வரை, 48 ஐரோப்பிய நாடுகளையும், 54 ஆப்பிரிக்க நாடுகளையும், மத்திய கிழக்கில் 10 நாடுகளையும் சுற்றிப் பார்த்தார்.
2015 முதல் 2017 வரை, தென் அமெரிக்காவில் உள்ள 13 நாடுகளில் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டார். 2018-ல், அவர் கரீபியன் தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகள் சில பகுதிகள் முழுவதையும் சுற்றி பயணம் செய்தார்.
2019-20 ஆம் ஆண்டில், கனடாவிற்குச் செல்வதற்கு முன்பு அவர் அமெரிக்காவின் 48 மாகாணங்களில் பயணம் செய்தார். அவரது பயணங்களில் ரஷ்யா மற்றும் சீனாவும் அடங்கும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் மாட்டிக்கொண்ட இவர், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு போராடியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து சீனாவை விட்டு வெளியேறி, தென் கொரியா பின்னர் நியூசிலாந்துக்கு பயணம் செய்தார், அங்கு அவர் கிட்டத்தட்ட ஒரு வருடம் தங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வழியாக இந்தியாவை நோக்கிப் பயணித்தார்.
சோமன் தனது மிதிவண்டி பயணத்தில் எய்ட்ஸ் குறித்தான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டதாக கூறினார்.
இவரது சுற்றுப்பயணத்திற்கான தூண்டுதல், சுவாமி விவேகானந்தரின் போதனைகள், பிமல் முகர்ஜி எழுதிய 'தோ சக்கா துனியா' (இரு சக்கரங்களில் உலகம்) என்ற புத்தகமும் தனக்கு உத்வேகம் அளித்ததாக கூறினார்.
இவர் தற்போது தனது கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளார். சோமன் தற்போது ' புனர் மிலன் பாரத் ' (இந்தியாவை மீண்டும் ஒன்றிணைத்தல்) என்ற பெயரில் நாடு தழுவிய பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட பாதையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, துவாரகா முதல் காமாக்யா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மிசோரம் வரை சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை அடங்கும் என சோமன் தெரிவித்துள்ளார்.