இந்தியா

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காத உறவினரின் வீட்டுக்கு தீவைத்த வாலிபர்

பைசல் போதையில் எந்த செயலிலும் ஈடுபடுவார் என்று கருதிய அமீனா, அவர் மிரட்டி வருவது குறித்து போலீசில் புகார் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கனியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜஹான். இவரது மனைவி அமீனா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அமீனாவின் சகோதரியின் மகன் பைசல்(வயது28). போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், சரியாக வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார். அவர் உறவினர் என்ற முறையில் அமீனாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபடி இருந்துள்ளார்.

சம்பவத்தன்றும் அங்கு சென்ற பைசல், போதைப்பொருள் வாங்குவதற்கு 700 ரூபாய் தருமாறு அமீனாவிடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து பைசல் அமீனாவுடன் தகராறு செய்துள்ளார்.

மேலும் அவரை அடிக்கடி மிரட்டியபடி இருந்துள்ளார். பைசல் போதையில் எந்த செயலிலும் ஈடுபடுவார் என்று கருதிய அமீனா, அவர் மிரட்டி வருவது குறித்து போலீசில் புகார் கூறியுள்ளார். ஆனால் அதன்பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

ஆனால் பைசல் தொடர்ந்து மிரட்டியபடியே இருந்துள்ளார். இதனால் பயந்துபோன் அமீனா, தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் அமீனாவின் வீட்டுக்கு பைசல் வந்துள்ளார்.

அவர் தனக்கு பணம் தராத ஆத்திரத்தில் அமீனாவின் வீட்டுக்கு தீவைத்தார். இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின. அதே நேரத்தில் உறவினர் அமீனாவின் வீட்டுக்கு தீவைத்துவிட்டதாக கூறி மங்களாபுரம் போலீஸ் நிலையத்தில் பைசல் சரணடைந்தார்.

இதையடுத்து போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்பு பைசலை கைது செய்து விசா ரணை நடத்தினர். போதைப் பொருள் வாங்க பணம் கொடுக்காத ஆத்திரத்தில் அமீனாவின் வீட்டுக்கு தீவைத்ததாக போலீசில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமீனாவின் வீட்டில் ஆள் இருப்பததாக நினைத்தே தீவைத்ததாக விசாரணையின்போது போலீசாரிடம் பைசல் தெரிவித்துள்ளார். அமீனா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.