இந்தியா

சந்தேகத்தால் வீழ்ந்த 2 வருட காதல்- வாலிபருடன் நடனமாடிய காதலி வெட்டிக்கொலை

மகாலட்சுமி வேறு ஒரு வாலிபருடன் நடனமாடினார். இது சின்ன ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

காதலி மற்றொரு வாலிபருடன் நடனமாடியதால் ஏற்பட்ட தகராறில் சின்ன ராவ், மகாலட்சுமியை கத்தியால் குத்தி கொன்றார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அஜித் சிங் நகர், நியூராஜரா ஜேஸ்வரிப்பேட்டையை சேர்ந்தவர் படாலா மகாலட்சுமி (வயது19). இவரது தந்தை தமிழகத்தை சேர்ந்தவர். தாய் இறந்து விட்டதால் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் சென்றார். மகாலட்சுமி ராஜீவ் கிரககல்ப அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது பாட்டி சாந்தம்மா என்பவருடன் வசித்து வந்தார்.

அடுக்குமாடிக் குடியிருப்பு

மேலும், அவர் பாஞ்சா சென்டரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தார். ஸ்ரீகாகுளம் மாவட்டம், குப்பிடிப்பேட்டையைச் சேர்ந்த மக்கு சின்ன ராவ் (22), அதே அடுக்குமாடிக் குடியிருப்பின் சி பிளாக்கில் வசிக்கும் தனது அண்ணன் மகேஷுடன் வசித்து வந்தார். அவர் சுப நிகழ்வுகளுக்காக மண்டபங்களை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

மகாலட்சுமி

மகாலட்சுமியும் சின்ன ராவும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்ததால் அடிக்கடி சந்தித்தனர். இந்த சந்திப்பு காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இதுகுறித்து இருதரப்பு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த பகுதியில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது.

நடத்தையில் சந்தேகம்

இதில் மகாலட்சுமி வேறு ஒரு வாலிபருடன் நடனமாடினார். இது சின்ன ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் மகாலட்சுயின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மகாலட்சுமி சின்னராவை வெறுக்க தொடங்கினார். அவரது பாட்டியும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

கொலை

இதற்கிடையே சந்திக்க மறுத்த மகாலட்சுமிக்கு சின்ன ராவ் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. இதனால் சின்ன ராவ் மகாலட்சுமியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று தனது வீட்டிலிருந்து தேங்காய் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு மகாலட்சுமியின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, தனியாக இருந்த மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். வேகமாக சென்ற சின்ன ராவ் மகாலட்சுமியின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் துடிதுடித்தார்.

தற்கொலை

சின்ன ராவ் அங்கிருந்து அதே அடுக்குமாடிக் குடியிருப்பின் 3-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து தலைகீழாக குதித்தார். இந்தச் சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். மூச்சுத்திணறிக் கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

போலீசார்

அஜித் சிங் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இருவரது வீடுகளும் அருகே இருந்ததால் இறுதி சடங்கின் போது போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT