சிறு குழந்தைகளுடன் பயணிக்கும்போது பெற்றோர்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
பயணத்தின்போது பெற்றோர்கள் ஒரு நொடி கவனக்குறைவாக இருந்தாலும் அது எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு குஜராத் மாநிலம் சூரத் அருகே நடந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
குஜராத்தின் அம்ரேலியில் இருந்து சூரத் நோக்கி ரவுனக் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என 4 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். பேருந்து சூரத் நகரின் கிம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அதன் முன்பக்க கதவு மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது.
அப்போது தாய் தனது செல்போனில் பேசுவதில் மும்முரமாக இருந்தார். இதனை கவனிக்காத 2 குழந்தைகளும் பேருந்தின் நடுப்பகுதியில் உள்ள நடைபாதையில் விளையாடி கொண்டிருந்தன. விளையாட்டு சுவாரசியத்தில் ஒரு சிறுவன் மெதுவாக பேருந்தின் முன்பகுதிக்கு, அதாவது டிரைவர் இருக்கைக்கு அருகே நகர்ந்து சென்றான். இதனை கவனித்த பேருந்து டிரைவர், சிறுவனை பின்னால் செல்லுமாறு சைகை காட்டி அறிவுறுத்தினார். ஆனால் டிரைவர் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த நொடியே நிலைதடுமாறிய அந்த சிறுவன், திறந்திருந்த முன்பக்க கதவு வழியாக ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்தான்.
சாலையில் சிறுவன் விழுந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்த டிரைவர், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். திடீரென பேருந்து நின்றதாலும், குழந்தை கீழே விழுந்ததை பார்த்ததாலும் பேருந்துக்குள் இருந்த தாயும், மற்றொரு குழந்தையும் அலறி துடித்தனர். பதறியடித்து பேருந்தில் இருந்து கீழே இறங்கிய தாய், சாலையில் விழுந்து கிடந்த தனது மகனை ஓடிச்சென்று வாரி அணைத்து மீட்டார். நல்லவேளையாக சிறுவனுக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
டிரைவரின் சமயோசித புத்தியாலும், உடனடியாக பேருந்தை நிறுத்தியதாலும் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு சிறுவன் நூலிழையில் உயிர் தப்பினான். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
தற்போது இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. ஓடும் பேருந்தில் கதவை திறந்து வைத்திருந்த அலட்சியமும், குழந்தைகளை கவனிக்காமல் தாய் செல்போனில் மூழ்கியிருந்ததும் நெட்டிசன்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகளுடன் பயணிக்கும்போது பெற்றோர்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.