மேற்கு வங்கத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அமைச்சர் அக்னிமித்ரா பால் பேசியுள்ள கருத்து விவாதபொறுப்பாகி வருகிறது.
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக அக்னிமித்ரா பால் உள்ளார்.
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அக்னிமித்ரா பால், "அரசாங்கம் மாறிவிட்டது என்பதற்காக மட்டும் கொசுக்களை கடிக்காதே என்று சொல்ல முடியாது" என்றார்.
கொசுக்களை அடக்க முடியாது என்பதால், இந்தச் சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
மேற்கு வங்கத்தில் கொசுக்கடி காரணமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 4,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவல் காலத்தில் மாணவர்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி பள்ளிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வாரம், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபாதையில் தனது குழந்தைக்குப் பால் சூடாக்கிக் கொண்டிருந்த ஒரு வீடற்ற பெண்ணை அக்னிமித்ரா பால் திட்டும் காணொளி ஒன்று வெளியானது.
"நடைபாதையில் குழந்தைக்குப் பால் சூடாக்குகிறாயா? பார்க் ஸ்ட்ரீட்டிலா? இங்கே குடும்பம் நடத்த உனக்கு யார் அனுமதி கொடுத்தது?" என்று பால் கேட்பது அந்தக் காணொளியில் இடம்பெற்றிந்தது. பின்னர் கொல்கத்தா காவல்த்துறையினர் அந்த குடும்பத்தினரை அங்கிருந்து விரட்டியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று அந்தப் பெண்ணை சந்தித்து இருப்பிடம் வழங்குவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.