மாணவர்களுக்கு எதிரான அநீதி, தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை எதிர்த்து சமூக வலைத்தளத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கணக்கை அபிஜித் திப்கே தொடங்கினார். இந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அதன்பின் ஐதராபாத்தில் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்றும் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அபிஜித் திப்கே கூறியதாவது:-
நான் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். நாட்டில் உள்ள அனைத்து பகுதி இளைஞர்களும் இங்கு உள்ளனர். நீதி கிடைக்கும் வரை இங்கே போராட்டம் நடத்த விரும்புகிறார்கள். எங்களுடைய போராட்டத்திற்கான அனுமதியை நீடிக்க டெல்லி காவல்துறைக்கு வேண்டுகோள் வைக்கிறேன். போராட்டம் அமைதியாக நடைபெற்றுள்ளது. நாங்கள் இங்கே அமர விரும்பும் அப்பாவி மாணவர்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஒரே கண்டிசன் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். டெல்லி போலீசார் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால், நானே முதலில் முன்வந்து கைதாவேன்.
இவ்வாறு அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 6 மணி வரைதான் போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.