சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிறகு, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கு வங்க மாநில அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இனி கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பெண்களுக்கான இந்த வசதிகளை அவர்களின் நலன் கருதியும், சமூகரீதியாக வலுப்படுத்தவும் மற்றும் அவர்களின் போக்குவரத்துக்கு வசதிகளை எளிதாக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் குறுகிய தூரம் செல்லும் உள்ளுர் பேருந்துகளிலும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே தூரமாக செல்லும் பேருந்துகளிலும் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் இந்த இலவச சலுகை அமல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தை முறையாக பயன்படுத்த புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் QR கோடு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதற்குப் பெண்கள் தங்களின் பகுதிக்கு உட்பட்ட BDO (வட்டார வளர்ச்சி அலுவலகம்) அல்லது SDO (துணைப் பிரிவு அலுவலகம்) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது பள்ளி/கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அரசு ஆவணத்தின் நகலை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்மார்ட் கார்டு கைகளில் கிடைக்கும் வரை திட்டம் தள்ளிப்போகாமல், ஜூன் 1 முதல் பெண்கள் உடனடியாக கட்டணமில்லாமல் பயணிக்கலாம். ஸ்மார்க் கார்டு வழங்கப்படும் வரை, பெண்கள் தங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து, 'பூஜ்ஜிய மதிப்புள்ள பயணச்சீட்டை' பெற்றுக்கொண்டு பயணம் செய்யலாம்.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு மாநில நிதித்துறை கடந்த மே 16 அன்றும், மாநில அமைச்சரவை மே 18 அன்றும் தங்களது முழு ஒப்புதலை வழங்கியுள்ளன. ஆளுநரின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, வரும் ஜூன் 1, 2026 முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.