இந்தியா

காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சியா?.. ஒருபோதும் அப்படி கூறவில்லை - மத்திய அமைச்சரை கண்டித்த சசி தரூர்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி எனும் வலிமையான பெண் தலைவரின் தலைமையில், பெண்களின் உரிமைகளுக்காகவும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்காகவும் உறுதியாக நின்றுள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா கடந்த 17ஆம் தேதி மக்களவையில் தோல்வியடைந்தது.

இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (அதாவது 352 வாக்குகள்) கிடைக்காததால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்த தோல்விக்கு முக்கிய காரணம், வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் வழங்காமல், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்துவது மற்றும் தொகுதி மறுசீரமைப்பைக் கோரியது.

இந்த மசோதா தோல்வி அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஒப்புக்கொண்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

“நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, தரூர் என்னிடம், 'காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானதாக இருக்கலாம், ஆனால் எந்தப் பெண்ணும் சசி தரூரை பெண்களுக்கு எதிரானவராகக் கருத மாட்டார்கள்' என்று கூறினார்.

அதற்கு நான், 'ஆம், உங்களை யாரும் பெண்களுக்கு எதிரானவர் என்று அழைக்க மாட்டார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் உங்கள் கட்சி பெண்களுக்கு எதிரானது' என்று கூறினேன்.” என தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது என தான் கூறியதாக கிரண் ரிஜிஜூ கூறியதை சசி தரூர் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மன்னிக்கவும்; கிரண் ரிஜிஜூ அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தபோதிலும், எந்தவொரு தருணத்திலும் நான் அத்தகைய எதையும் கூறவோ அல்லது மறைமுகமாகக் குறிப்பிடவோ இல்லை. புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு சாட்சிகள் இதை உறுதிப்படுத்த முடியும்!

"காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடும் என்பதை... அவர் ஒரு வகையில் ஒப்புக்கொண்டார்," என்று நமது அமைச்சர் கூறுகிறார். இல்லை, நான் குறிப்பிட்டது அது அல்ல. மன்னிக்கவும். நான் எந்த வகையிலும் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி எனும் வலிமையான பெண் தலைவரின் தலைமையில், பெண்களின் உரிமைகளுக்காகவும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்காகவும் உறுதியாக நின்றுள்ளது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவைத் தொடங்கி, எங்கள் ஆட்சிக்காலத்தில் அதை மாநிலங்களவையில் நிறைவேற்றியதுடன், 2023-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அதை மக்களவையில் கொண்டு வந்தபோதும் அதற்கு ஆதரவளித்தது.

நாங்கள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு முழுமையாக ஆதரவளிக்கிறோம்; மேலும், தொகுதி மறுவரையறை நடைமுறையுடன் அதை இணைக்காமல், இப்போதே அதைச் செயல்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.