பெண்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ ஆவதை இலக்காகக் கொள்வதற்கு முன்பாக, அவர்கள் முதலில் சிறந்த தாயாக மாறுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பேசியுள்ளார்.
கான்பூரில் உள்ள சத்திரபதி ஷாகு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுகையில்,
பெண்களின் தொழில்முறை வெற்றி என்பது குடும்பப் பொறுப்புகளைத் தியாகம் செய்துவிட்டு வரக் கூடாது.
நீங்கள் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவோ அல்லது ஆசிரியராகவோ ஆகலாம், ஆனால் அதற்கு முன்பாக ஒரு சிறந்த தாயாக மாறப் பழகுங்கள்.
வீட்டில் எப்படிச் சமைக்க வேண்டும் என்பது ஆண், பெண் என அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பின் பெண் பிள்ளைகள் தங்களது கல்வியை நிறுத்திவிடக் கூடாது. தங்களது அறிவையும் திறமையையும் தேசக் கட்டமைப்பிற்குப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
இந்த விழாவில் மொத்தம் 1,07,713 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் பதக்கங்களை வென்றவர்களில் கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் மாணவிகள் ஆவர்.
முன்னதாக செய்வாயன்று நடந்த ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியிருந்த ஆனந்திபென் படேல்,
"இப்போதெல்லாம், குடும்பங்கள் குழந்தைகளின் காதலை மறுப்பதால், பையன்களும் பெண்களும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பெண்கள் கர்ப்பமாகி, அவர்களின் குழந்தைகள் அரசின் பராமரிப்பில் விடப்படுகிறார்கள்.
காதலிப்பவர்கள் திருமணத்திற்கு முன்பாகத் தங்களது காலில் சொந்தமாக நிற்க வேண்டும் என்றும், சுயசார்பு அடைந்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனந்திபென் படேல் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவரும் ஆவார்.