ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் மாணிக்கம் தண்டாவை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சிரவந்தி. தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர்.
பிரவீன் வேலை தேடி குடும்பத்தினருடன் ஐதராபாத் சென்றார். பிரவீனும், சிரவந்தியும் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் பிரவீன் தனது அத்தை மகளான மகேஸ்வரியை சந்தித்தார். இது காதலாக மாறியது. கடந்த ஆண்டு மகேஸ்வரியை 2-வது திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.
பிரவீன் 2-வது திருமணம் செய்து கொண்டது குறித்து சிரவந்திக்கு தெரிய வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
அப்போது பிரவீன் 2-வது மனைவி மகேஸ்வரியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ, போட்டோக்களை முதல் மனைவியிடம் காண்பித்து சித்ரவதை செய்து வந்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிரவந்தி விடுதியில் தங்கி படித்து வந்த தனது மகன்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது சகோதரருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிரவந்தியின் சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 2 மகன்களையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து சிரவந்தியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.