இந்தியா

பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - உடலில் கல், தோட்டா, மரக்கட்டையை செருகி கொடூரம்: 5 பேருக்குப் போலீஸ் வலைவீச்சு

இயற்கை உபாதைக்காக வெளியே சென்றபோது அரங்கேறிய கொடூரம்.

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஐந்து பேர் கொண்ட கும்பலால் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது உடலுக்குள் தோட்டா, கல் மற்றும் மரக்கட்டை போன்ற பொருட்கள் செலுத்தப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஜூன் 11ம் தேதி இயற்கை உபாதைக்காக சென்ற பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாகப் பிடித்து, ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அவர் சத்தம் போட முயன்றபோது, பிளேடால் மார்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கீறி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 12 அன்று வீடு திரும்பினார். ஆனால் தொடர்ந்து பிறப்புறுப்பில் வலி கடுமையாக நேற்று (ஜுன்.17) மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் அவரது உடலின் உட்பகுதியிலிருந்து ஒரு தோட்டா, ஒரு கல் மற்றும் ஒரு மரக்கட்டையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.

இதனையடுத்து பெகுசராய் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் பாண்டே தலைமையிலான குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற கும்பல் தன் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடி, தன்னைத் தாக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்போது புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.