உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பு பெண் ஒருவர் தனது தாலியை கழற்றிக் காட்டி அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
15 ஆண்டுகால பழைய வழக்கு ஒன்றில் ஐதராபாத்தை சேர்ந்த அந்த நடுத்தர வயது பெண், வக்கீல்கள் எவருமின்றி தன் தரப்பு வாதத்தை தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன் எடுத்துரைத்தார்.
அப்போது அவர், அழுதபடியே, கடந்த 15 ஆண்டுகளாக நிம்மதியாக வாழவில்லை என்றும் தனது ஒட்டுமொத்த குடும்பமும் சீர்குலைந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக கூறிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், இதற்காக ஐதராபாத்தில் இருந்து இவ்வளவு தூரம் பணம் செலவழித்து நேரில் வரத் தேவையில்லை என்றும் ஆன்லைன் மூலமாகவே பங்கேற்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.
ஆனால் அவரிடம் தனது நிலையை கண்ணீருடன் மேலும் எடுத்துரைத்த அப்பெண், தனது வேதனை ஆன்லைன் மூலம் விவரிக்கும் அளவை விடப் பெரியது என்று கூறிய அந்தப் பெண் தன் குழந்தைகளுக்கு உணவளிக்க கூட முடியவில்லை என்றும் அவர்களின் கல்விக் கட்டணத்தையும் செலுத்த முடிவதில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, இப்போது என் கழுத்தில் எதுவும் மிஞ்சவில்லை என கூறி தன் கழுத்தில் அணிந்திருந்த தாலியை சுட்டிக்காட்டிய அவர் திடீரென அதை கழுத்தில் இருந்து கழற்றி காண்பித்தார்.
இது தலைமை நீதிபதி உட்பட அங்கிருந்தோரை நிலைகுலைய செய்தது.
அந்தப் பெண்ணின் நிலையை உணர்ந்து அவரை அமைதிப்படுத்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், அவரது வழக்கு அடுத்த வாரமே சிறப்பு அமர்வில் முன்னுரிமை தந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
அப்பெண் குறித்தும், அவரின் வழக்கு என்ன என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் நீதிமன்ற அறையில் தாலியை கழற்றி காண்பித்த சம்பவம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், சீர்திருத்த முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் 800 பழைய சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்க நான்கு சிறப்பு டிவிஷன் அமர்வுகளை உருவாக்கினார். அதில் இரு வழக்காக அப்பெண்ணின் வழக்கு இருக்கலாம் என கருதப்படுகிறது.