குழந்தையுடன் நூர் அகமது, அப்ரின் பானு. 
இந்தியா

காதல் மனைவியை கொன்ற வாலிபர்

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம், பெல்லாரி, கவுல் பஜாரை சேர்ந்தவர் நூர் அகமது. அதே பகுதியை சேர்ந்தவர் அப்ரின் பானு. இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

பெண் கொலை

இதனால் நூர் அகமது மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நூர் அகமது கடந்த மே மாதம் 21-ந் தேதி மனைவியிடம் நைசாக பேசி வெளியில் அழைத்துச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நூர் அகமது தனது மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த அப்ரின் பானு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடல் வீச்சு

மனைவி இறந்ததை உறுதி செய்த நூர் அகமது அவரது பிணத்தை தனது பைக்கில் வைத்து எடுத்து சென்றார். 10 கிலோமீட்டர் தூரம் உள்ள குடத்தினி என்ற இடத்தில் உள்ள முள் புதரில் மனைவியின் பிணத்தை வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார். அப்ரின் பானுவை காணாததால் அவரது தந்தை இது குறித்து பெல்லாரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்ரின் பானு பிணம் வீசப்பட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜெயிலில் அடைப்பு

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த அப்ரின் பானுவின் பிணத்தை மீட்டனர். இதனைக் கண்ட அவரது பெற்றோர் இறந்து கிடப்பது தனது மகள் தான் என உறுதி செய்தனர். சந்தேகத்தின் பேரில் நூர் அகமதுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் நூர் அகமதுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.