மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா கரியா மாவட்டத்தின் நரேந்திரபூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மகா மாயாதலாவின் தெந்துல்தலாவில் ஒரு அழகு நிலையம் உள்ளது.
இதனை ரூபானி தாஸ்(வயது 50) என்பவர் நடத்தி வந்தார். நேற்று மதியம் இந்த அழகுநிலையத்துக்கு மர்மநபர் ஒருவர் வந்தார். அவரை பார்த்ததும் பதறிய ரூபானி தாஸ் அவரை வெளியே செல்லுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அழகு நிலையத்தின் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிரச் செய்தது. அங்கு ரூபானி தாஸ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் அந்த வாலிபரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடனே இதுபற்றி நரேந்திரபூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
ரூபானி தாசை குத்திக்கொலை செய்தது அரியானா மாநிலம் ரோத்தக்கைச் சேர்ந்த பங்கஜ்(44) என்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது. ரூபானி தாசுக்கும் பங்கஜுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ரூபானி தாஸ் வீட்டைவிட்டு வெளியேறி ரோத்தக்கிற்குச் சென்று பங்கஜுடன் சுமார் 3½ மாதங்கள் தங்கியிருந்து பின்னர் அவர் திரும்பி வந்துள்ளார். அதன்பிறகு பங்கஜுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரூபானி தாசை பங்கஜ் கொலை செய்து தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.