இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளாக தினமும் நடந்தே தபால் வேலை செய்யும் பெண்

வேறு எந்தவிதமான சலுகையையும் அவர் கோருவதும் இல்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹிரபோரா கிராமத்தை சேர்ந்தவர் உல்பாத் பானோ. இவர் தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்ட தபால் நிலையத்தில் இருந்து தினமும் காலை சுமார் 25 கடிதங்களைப் எடுத்துக்கொண்டு, அதை உரியவர்களிடம் சேர்க்க நடந்தே புறப்படுகிறார்.

55 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறார். கடிதங்களை கொண்டு செல்ல அவரிடம் தபால் வேனோ மிதிவண்டியோ இல்லை. வழியில் களைப்பு ஏற்பட்டாலும் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து தொடர்ந்து கடிதங்களை உரிய முகவரியில் சேர்க்க புறப்பட்டு விடுவார்.

ஒவ்வொரு கடிதத்தையும் சரியான நபர்களிடம் சேர்ப்பதற்காக, தனது சொந்த கிராமமான ஹிரபோராவில் உள்ள கல் சுவர்களையும், நெளிவான தகரக் கூரைகளைக் கொண்ட மரக்கொட்டகைகளையும் கடந்து, குளிர்காலம் வரும்போது முழங்கால் அளவு பனி வழியாகவும் சிரமப்பட்டு நடந்தே செல்கிறார்.

30 ஆண்டுகளை கடந்தும் உல்பாத்தின் அன்றாடப் பணிகள் மாறவில்லை. ஆனாலும் அவர் இந்தப் பணியை ஒரு புதிய பணியாளர் வேலைக்கு சேர்ந்த போது செய்யும் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் அணுகுகிறார். ஹிரபோராவைப் பொறுத்தவரை, காஷ்மீரின் முதல் பெண் தபால்காரரான அவர், அப்பகுதியின் வெளி உலகத்துடனான ஒரே தபால் இணைப்பாகத் திகழ்கிறார்.

ஹிரபோரா கிராமம் பனிப்பொழிவு காரணமாக வாரக்கணக்கில் நடைபாதைகள் புதைந்து போகும் ஒரு உயரமான இடத்தில் அமைந்துள்ளது. உல்பாத் தனது வேலையின் போது கடந்துசெல்லும் நிலப்பரப்பு கடினமானது.

இந்தப் பகுதிகளில் குளிர்காலத்தில் அடிக்கடி பனி பொழியும் போது ஊரே முடங்கி விடும். ஆனால் உல்பாத் வழக்கம் போல் தன் தபால் பணியை தொடர்வார். ஒரு கையில் குடையுடனும், மறு கையில் தபால் கட்டுடனும் கிளம்பி விடுவார். வெயில், மழை, பனி என எதுவாக இருந்தாலும், அப்பகுதியில் தபால் சென்றுகொண்டே இருக்கும்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த தபால் துறையில், ஜம்மு-காஷ்மீரின் மற்ற பகுதிகளில் உள்ள தனது ஆண் சகாக்களைப் போலவே அதே மணி நேரம் உழைத்து, சமமான பணிகளைச் செய்தும், உல்பாத் மாதத்திற்கு ரூ.22 ஆயிரம் தான் சம்பாதிக்கிறார். வேறு எந்தவிதமான சலுகையையும் அவர் கோருவதும் இல்லை. ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகளே உள்ள நிலையில், இந்த கடினமான வேலையை செய்ய உங்களால் எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

சில நேரங்களில் இது கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த வேலையின் மீதான ஆர்வம் என்னை இதை விட்டு விலக அனுமதிக்கவில்லை. இந்த தொழிலில் கண்ணுக்கு தெரியாத வெகுமதிகளே என்னை தொடர்ந்து இயங்க வைக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில், நீண்டகாலமாக உறவினரிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட கடிதம், அல்லது தொலைவில் உள்ள ஒருவரிடமிருந்து வரும் பார்சல், வேலைவாய்ப்பு போன்ற நற்செய்திகளை நான் கொண்டு செல்லும் போதெல்லாம், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுவதை பார்க்கிறேன்.

இது புவியியல் எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்கிறது. இதனால் நான் என் வேலையை ஒரு நற்செயலாகக் கருதி மனப்பூர்வமாக செய்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். உல்பாத் பானோவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.