இந்தியா

9 நாட்களாக தீவிர நவராத்திரி விரதம்... பீகார் பெண் பலி!

விரதத்தின்போது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததால் நீரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

பீகாரில், நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களாக பூஜைப் பொருட்கள் நிரம்பிய மண் பானையை நெஞ்சில் சுமந்து விரதம் மேற்கொண்ட 35 வயது பெண், வேண்டுதல் முடிந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் பீகாரின் சுபௌல் மாவட்டத்தில் உள்ள திரிவேணிகஞ்ச் நகர், பரிஷத் பகுதியைச் சேர்ந்த சச்சிதா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சச்சிதா தேவி நவராத்திரி காலம் முழுவதும், அப்பகுதியில் உள்ள துர்கா தேவி கோயில் ஒன்றில், உடைத்த அரிசி, பாக்கு, மஞ்சள் மற்றும் நாணயங்கள் அடங்கிய மண் பானையைத் தன் மார்பின் மீது வைத்துக்கொண்டு துர்கா தேவியைப் படுத்த நிலையில் வழிபட்டு வந்துள்ளார்.

தனது வேண்டுதல்களை முடித்துக்கொண்டு கடந்த செவ்வாக்கிழமை (அக்.20) வீடு திரும்பிய இவர், வீட்டில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். மருத்துவனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றநிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழப்பு மற்றும் ஏற்கனவே இருந்த இதய நோய் ஆகியவை அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முறையான விசாரணைக்குப் பிறகே மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியும் என திரிவேணிகஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் சச்சிதா தேவியின் குடும்பத்தினர் இதுதொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும், பிரேதப் பரிசோதனைக்கும் மறுத்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதய நோய் இருப்பவர், உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல், நெஞ்சில் தொடர்ந்து 9 நாட்களாக பாரத்தை ஏற்றி வைத்திருந்தது இந்த நெஞ்சுவலிக்கு வழிவகுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT