ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் மத்தி நாயண பள்ளியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் விவசாய வேலை செய்து வருகிறார். சரஸ்வதி தினமும் காலை எழுந்து தயாராகி போலீஸ் உடை அணிந்து வெளியே செல்வார்.
உறவினர்கள், நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும் போலீஸ் உடையில் செல்வது வழக்கம். இவர் அனந்தபூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வேலை செய்வதாக கூறி அனைவரையும் நம்ப வைத்தார். சரஸ்வதியை பார்ப்பவர்கள் அவருக்கு போலீஸ் உடை என்றால் அதிக மரியாதை உள்ளதாக நினைத்தனர்.
ஆனால் அவர் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை, தம்பியை அமெரிக்கா அனுப்ப வேண்டும் என கணவருடன் சேர்ந்து தெரிந்தவர்களிடம் எல்லாம் லட்சக்கணக்கில் கடன் வாங்கினார். கடனை திருப்பி கேட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் ஆலமூருவை சேர்ந்த ரங்க நாயக்கலு, ராமா நாயுடு ஆகியோர் அறிமுகமாயினர். அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்டார். கர்நாடகாவில் உள்ள மந்திரவாதி மூலம் பூஜைகள் செய்து குழந்தை பாக்கியம் பெற ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். 2 குடும்பத்தினரையும் ஏமாற்றி ரூ.1.20 கோடி பணம், 17 பவுன் நகைகளை பறித்தார்.
பூஜைக்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சரஸ்வதி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கணவருடன் தலைமறைவானது தெரிய வந்தது. கணவன் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.