மைசூரில் 45 வயது பெண் ஒருவர், தான் வேலை செய்த இடத்தில் மேற்பார்வையாளர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகா மாநில மைசூரில் நகேஸ்வரி என்பவர் பல ஆண்டுகளாக ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு மேற்பார்வையாளர் தான் வாராந்திர விடுப்புகள் கேட்டபோது அதை மறுத்துவந்ததாக கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் இருந்தே தன் மீது தவறுகள் இல்லாதபோதிலும், தவறுகளை ஒப்புக்கொள்ளும்படி வருபுறுத்தியதாகவும், உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு மூன்று நாட்கள் பணிக்கு வராததால், திடீரென தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் நாகேஸ்வரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பணியிடத்தில் தனக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சலால், இந்த விபரீத முடிவை எடுக்க தான் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுகுறித்து நாகேஸ்வரியின் கணவர் அசோக் கூறுகையில், “நான் மதியம் முழுவதும் அவளிடம் பேச பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போது எந்தவிதமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.
இதனால் நான் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தேன். அப்பொழுது அவள், தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். நான் உடனே எனது மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.
அங்கு என் மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து என் மனைவி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்று கூறினார்.
இந்த நிலையில் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.