மகாராஷ்டிராவின் தானேவில் பெண் ஒருவர் தனது கணவனுடன் சேர்ந்து காதலனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தானேவின் மும்ப்ரா பகுதியை சேர்ந்த அற்பாஸ் மக்சூத் அலி கான் (26) என்பவர் டோம்பிவிலியில் இன்ஜீனியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் வசாய் பகுதியைச் சேர்ந்த மெஹஜபீன் காதூன் (25) என்ற திருமணமான பெண்ணுக்கும் இடையே 2021 முதல் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
மெஹஜபீன் அடிக்கடி அற்பாஸிடமிருந்து பணம் வாங்கி வந்துள்ளார். சமீபகாலமாக அற்பாஸ் பணம் தருவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மெஹஜபீன், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதற்காகத் தனது கணவன் ஹசன் ஷேக், சகோதரன் தாரிக் ஷேக் மற்றும் அவரது நண்பர் மொஜ்ஜம் பதான் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
கடந்த ஏப்ரல் 3 அன்று, அற்பாஸை வசாயில் உள்ள தனது வீட்டிற்கு மெஹஜபீன் வரவழைத்துள்ளார். அங்கு பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது திட்டமிட்டபடி அங்கிருந்த நால்வரும் சேர்ந்து அற்பாஸை பிளாஸ்டிக் குழாய்களால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
பின்னர், அவரது உடலை ஒரு பெரிய டிரம்மிற்குள் திணித்து, அருகில் இருந்த சாக்கடைக் கால்வாயில் வீசியுள்ளனர்.
அற்பாஸ் காணாமல் போனது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அற்பாஸ் காணாமல் போவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, மெஹஜபீனின் வங்கிக் கணக்கிற்கு ரூ.50,000 பணம் அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரது மொபைல் அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத்தை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
மே 7 அன்று, முதன்மைக் குற்றவாளியான மெஹஜபீன் மற்றும் அவரது சகோதரன் தாரிக் ஆகிய இருவரை மும்ப்ரா போலீசார் கைது செய்தனர்.
தற்போது தலைமறைவாக உள்ள மெஹஜபீனின் கணவன் ஹசன் ஷேக் மற்றும் அவரது நண்பரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.