இந்தியா

அடுத்த 48 மணி நேரத்திற்குள் எங்களை தாக்கிய பாஜக-வினரை கைது செய்ய வேண்டும்: சி.ஜே.பி. எச்சரிக்கை

குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி எச்சரிக்கை விடுத்தனர்.

ஜெய்ப்பூரில் பள்ளி ஆய்வின்போது தங்களது தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்களைக் கைது செய்ய, ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவருக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி 48 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடங்கி, அவரது ராஜினாமாவைக் கோருவோம் என்றும் சிஜேபி எச்சரித்துள்ளது.

சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்கா, அரசுப் பள்ளி பல ஆண்டுகளாக எருமைத் தொழுவத்தில் இருந்து இயங்கி வருவதாகவும், அதை ஆய்வு செய்யச் சென்றபோது கட்சியின் குழுவினர் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அஷுதோஷ் கூறுகையில், “நாங்கள் ராம்புரா-கன்வர்புரா கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு செய்யச் சென்றிருந்தோம். கடந்த பல ஆண்டுகளாக, அந்தப் பள்ளி ஒரு எருமைத் தொழுவத்தில் இயங்கி வருகிறது.

அப்போது நாங்கள் அங்கு சென்றபோது, எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜக- வினரை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும்.

இல்லையென்றால் நாங்கள் ராஜஸ்தான் முழுவதும் மாநில அளவிலான போராட்டத்தைத் தொடங்குவோம்.

மேலும் இந்த முறை, இது பள்ளிகளைப் பற்றியதாக மட்டும் இருக்காது. இந்த முறை, நாங்கள் ராஜஸ்தான் பள்ளி கல்வி அமைச்சரான மதன் திலாவரின் ராஜினாமாவைக் கோருவோம்"என்று அவர் கூறினார்.

ராஜஸ்தானில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சிஜேபி-யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்த சம்பவம் ராஜஸ்தானின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக உள்ளது

பள்ளியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படாமலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் எங்களை தாக்கிய பாஜக-வை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்படாமலும் இருந்தால், ஜந்தர் மந்தரில் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் போலவே ஜெய்ப்பூருக்குச் சென்று தர்ணா போராட்டம் நடத்துவோம்,” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், ஜெய்ப்பூரில் சி.ஜே.பி. குழு மீது தங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.

சி.ஜே.பி.யின் பின்னணியில் காங்கிரஸ் தொண்டர்கள் செயல்படுவதாக ராஜஸ்தான் பாஜக அமைச்சர் ஜவஹர் சிங் பெதாம் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், “காங்கிரஸ் கட்சியினர் வெவ்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு, கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள அமைதியைக் குலைக்க விரும்புகிறார்கள். மக்கள் அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியினர் இந்த சி.ஜே.பி. முகமூடியை அணிந்துள்ளனர். காங்கிரஸைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, அதனால் அவர்கள் வேறு ஒருவரின் முகமூடியை அணிந்துள்ளனர்” என்று அமைச்சர் பெதாம் கூறினார்.

இதையடுத்து ராஜஸ்தான் பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் கூறுகையில், சிஜேபி ஒரு அராஜக சக்திகளின் கட்சி என்று கூறினார்.

மேலும் அவர், இது அராஜக சக்திகளின் கட்சியாக மாறிவிட்டது. அவர்கள் பள்ளியைச் சீரமைக்கவில்லை, மாறாக அராஜகத்தைப் பரப்புகிறார்கள்,” என்று கெலாட் கூறினார்.