இந்தியா

DPDP சட்டத்தால் பறிபோகும் பத்திரிகை சுதந்திரம்?.. மத்திய அரசின் பதில் இதுதான்

உண்மை செய்திகளை நீக்குமாறு அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்படலாம் என்ற கவலையும் உள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP) 2023, பத்திரிகை சுதந்திரத்திரத்தை பாதிப்பது குறித்த கவலைகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

டிஜிட்டல் உலகில் மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின் சில விதிகள் செய்தி சேகரிப்பைக் கடினமாக்கி, பொது நலன் சார்ந்த விஷயங்களை பகிர்வதை தடுக்கக்கூடும் என்று கூறி, டிஜிட்டல் ஊடகங்கள் அவற்றை எதிர்த்தன.

வழக்கு

21 முக்கிய செய்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (DNPA), இந்த சட்டத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளது.

இந்தச் சட்டம் ஊடகங்களுக்கு எந்தவொரு குறிப்பிட்ட விலக்கையும் அளிக்கவில்லை என்றும், இது குடிமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதில் மத்திய அரசின் பதிலைக் கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு

இந்நிலையில் அரசியலமைப்பு சட்டம், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றும், அதை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இருப்பினும் இந்த சட்டம் குறித்த கவலைகள் அகலவில்லை.

முக்கிய கவலைகள்

டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் மனுவில் சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்சனைகள் கீழ்வருமாறு,

டிஜிட்டல் தனிப்பட்ட தரவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் நிறுவனங்கள் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் வரையறுக்கிறது.

தரவுகளை சேகரிப்பதற்கு முன்பு நிறுவனங்கள் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலையை இது உருவாக்குகிறது.

எனவே பொது நலன் சார்ந்த இதழியலுக்கு இந்தச் சட்டம் தனி விலக்கு அளிக்கவில்லை என்பதே டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் முக்கிய கவலையாகும்.

ஊழலை அம்பலப்படுத்த முடியாது

புலனாய்வு செய்தி சேகரிப்பின்போது, அரசு அதிகாரிகள் அல்லது நிறுவனங்களின் ஊழலை அம்பலப்படுத்த, ஊடகங்கள் முன் அனுமதியின்றி தகவல்களை சேகரிக்க வேண்டியிருக்கும். அனுமதி கோருவது, ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். மேலும் உண்மை செய்திகளை நீக்குமாறு அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்படலாம் என்ற கவலையும் உள்ளது.

மேலும், தனிநபர்கள் தங்கள் தரவுகளை நீக்குமாறு கோரும் உரிமை, ஊடக நிறுவனங்களின் ஆவண காப்பகங்களிலிருந்து பத்திரிகை அமைப்புகள் கவலை கொண்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைக்கு பங்கம்

DPDP சட்டத்தின் பிரிவு 44(3) மூலம் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் பிரிவு 8(1)(j)-இல் கொண்டுவரப்பட்ட திருத்தம் பொது நலன் கருதி தனிப்பட்ட தகவல்களை பெறுவதை கடினமாக்கியுள்ளது.

DPDP சட்டத்தின் 36 மற்றும் 37 பிரிவுகளின் கீழ் அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் எதிர்த்துள்ளது.

SCROLL FOR NEXT