இந்தியா

மேற்கு வங்க தேர்தல் முடிந்ததும் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பா? - மத்திய அரசு சொல்வது என்ன?

5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகத்தை அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.

ஈரான் போர்ச்சூழலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால் இந்தியாவில் எரிபொருள் விலை உயருமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு சட்டமன்றத் தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்தது. இன்று மேற்கு வங்க 2ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல்கள் நிறைவுபெற்று மே 4 வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் இன்று மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தும் என தகவல்கள் பரவின.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

"விலை எதுவும் உயர்த்தப்படவில்லை, எனவே மக்கள் தேவையில்லாமல் அச்சப்படத் தேவையில்லை" என்று சுஜாதா சர்மா உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் இருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன.

வீட்டு உபயோகம் மற்றும் போக்குவரத்துக்குத் தேவைப்படும் சிஎன்ஜி விநியோகம் 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் விநியோகம் 70 சதவீதம் வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தும் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகத்தை அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.

பார்மா, எஃகு மற்றும் விவசாயம் போன்ற முக்கியத் துறைகளுக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.