இந்தியா

காட்டு யானைகள் அட்டகாசம்: தமிழக-ஆந்திர எல்லையில் கும்கி யானைகள் நிறுத்திவைப்பு

யானைகளின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை யானைகளுக்கு பொருத்தப்படும்.

ஆந்திரா வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லைக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல்,கரும்பு வாழை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

தமிழக வனப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் ஆந்திரா பகுதிக்கு விரட்டியடிக்கின்றனர்.

ஆந்திரா வனப்பகுதிக்கு செல்லும் காட்டு யானைகளை கிராமங்களுக்குள் வராமல் தடுக்க கர்நாடகாவில் இருந்து ஜெயந்த், ரஞ்சன், அபிமன்யு, கிருஷ்ணா, தேவா, வினய் என்ற 6 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கும்கி யானைகள் சித்தூர் மாவட்டம, பலமனேரில் கவுண்டண்யா யானைகள் சரணாலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழையாமல் தடுப்பது குறித்து கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் திசை திருப்பும் இந்த செயல்முறையை கும்கி யானைகள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. கும்கி யானைகளுக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு யானைகளின் ரத்த மாதிரிகள் டேராடூனில் உள்ள வனவிலங்கு நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

ரத்த மாதிரி பரிசோதனைக்கு பிறகு யானைகளின் பராமரிப்பு மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். யானைகளின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை யானைகளுக்கு பொருத்தப்படும்.

இந்த விவரங்களை கொண்டு மரபணு பிரச்சனைகளுக்காக சிகிச்சை அளிக்கவும், அவற்றின் உடல்நிலை மதிப்பிட முடியும். எதிர்கால தேவைகளுக்காகவும், விரிவான விவரங்களை பெறுவதற்காகவும் இந்த டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டதாக சித்தூர் மாவட்ட வன அலுவலர் சுப்பராஜு தெரிவித்தார்.