தெலுங்கானாவில், சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில், இரண்டாவது கணவனை மரத்தில் கட்டி அடித்து கொன்ற ராஜேஸ்வரி, பின்னர் போலீசில் சரணடைந்தார். பகவான் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், ஜங்கான் மாவட்டம், நர்மேதா மண்டலம், மல்காபேட் தாண்டாவைச் சேர்ந்த பானோத்து பகவான் (43), இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அக்கன்னபேட் மண்டலம், சேவலால் மகாராஜ் தாண்டாவைச் சேர்ந்தவர் மாலோத்து ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பகவான், ராஜேஸ்வரி இருவரும் 2-வதாக திருமணம் செய்துகொண்டனர். ராஜேஸ்வரிக்கு அவரது முதல் கணவரிடமிருந்து கிடைத்த வீடு அவரது மகளின் பெயரில் உள்ளது. ராஜேஸ்வரி-பகவான் தம்பதியருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
ராஜேஸ்வரியின் முதல் மகளின் பெயரில் உள்ள சொத்தை மூன்று பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரிக்க வேண்டும் என்று பகவான் விரும்பினார்.
இது தொடர்பாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
நேற்று தம்பதியினர் சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகவான் பெற்றோர் வீட்டில் இருந்தனர். அப்போது சொத்துப் பங்கீடு தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜேஸ்வரி பொறுமையிழந்து, தன் கணவர் பகவானை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு கடுமையாகத் தாக்கினார்.
அந்த அடிகளால் பலத்த காயமடைந்த பகவான் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து ராஜேஸ்வரி போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.
போலீசார் பகவான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.