கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற வி.டி. சதீசன், தனது பதவியேற்பு உறுதிமொழியின் போது 'மேனன்' என்ற தனது சாதிப் பெயரைக் குறிப்பிட்டுப் பதவியேற்றது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் பதவியேற்பு விழாவில், அவர் "வாடச்சேரி தாமோதரன் மேனன் சதீசன் ஆகிய நான்..." என்று தனது முழுப் பெயரைப் படித்துப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
'மேனன்' என்பது கேரளாவின் உயர் சாதியாகக் கருதப்படும் நாயர் சமூகத்தின் உட்பிரிவுப் பெயராகும். இதனைத்தொடர்ந்து இதற்கு காங்கிரஸின் உள்ளிருந்தே பல விமர்சனங்கள் கிளம்பின.
இந்த விமர்சனங்களுக்குப் நேற்று செய்தியாளர்களிடையே பதிலளித்த சதீசன், தனது அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் மற்றும் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் உள்ள தனது முழுப் பெயரையே தான் வாசித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் இதில் சாதி நோக்கம் எதுவும் இல்லை என்றும், தனது தந்தையின் பெயரை (தாமோதரன் மேனன்) நினைவுகூரும் வகையிலேயே அதைக் குறிப்பிட்டதாகவும், தனது தாயின் பெயரையும் குறிப்பிட விரும்பியதாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பு அமையவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கேரள சட்டப்பேரவையில் வெற்றிப்பெற்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. அப்போதும் சாதிப்பெயருடன் கூடிய முழுப்பெயரைக்கூறி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஒருவர் தனது சாதிப்பெயரை கூறி பெருமைப்படுவது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு 2021 இல் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற போது, வெறும் "வி.டி. சதீசன்" என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.