India - China
இந்தியா

சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?

பெய்ஜிங், அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிட 'ஸாங்னான்' என்ற பெயரைப் பயன்படுத்துகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் வகையில் சீனா தொடர்ந்து இந்தியப் பகுதிகளுக்குச் சொந்தமாகப் பெயரிட்டு வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுப் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

'இந்திய நில அளவைத் துறை' வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், எல்லையோரப் பகுதிகளின் புவியியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை மக்கள் துல்லியமாக அறியும் வகையில் இந்தப் பெயர்கள் முறையாகப் பதியப்பட்டுள்ளன.

"அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, சீனாவின் இத்தகைய வீண் முயற்சிகள் கள யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது" என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எல்லையோரப் போர் நினைவிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள்:

சீனாவுடன் நேரடியாக மோதல் ஏற்பட்ட மற்றும் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 27 இடங்கள் இந்த வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

லாங்ஜூ 1962 போருக்கு முன்பாகவே, அதாவது 1959-லேயே இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே முதன்முதலில் மோதல் வெடித்த மிக முக்கியமான எல்லைப் பகுதி மேஜா கிராமம். மேல் சுபன்சிரி மாவட்டத்தில், லாங்ஜூ பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள எல்லையோரக் கிராமம்.

தக் லா கணவாய் 1962 இந்திய-சீனப் போரின் தொடக்கக் கட்டத்தில் மிகக் கடுமையான போர்கள் நடைபெற்ற உயரமான மலைப் பகுதி. ஜெய்ராம்பூர் சாங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியப் படைகள் கிழக்கு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் எல்லைக்கு விரைந்து செல்ல உதவும் முக்கிய ராணுவத் தளவாட மையமாகும்.

ராணுவ வீரர்களின் நினைவிடங்கள் 1962 போரின் நாயகர்களான ஜஸ்வந்த் சிங் ராவத்தை கௌரவிக்கும் 'ஜஸ்வந்த் கர்' மற்றும் த்ரிலோக் சிங் தாப்பாவை கௌரவிக்கும் 'ஷேர்-இ-தாப்பா நினைவிடம்' ஆகியவையும் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

வரைபடத்தில் சேர்க்கப்பட்ட மற்ற இடங்களில் உயரமான ஏரியான சம்போ சரோவர், பாரா குண்டுன், சோட்டா குண்டுன், தன் பாரி, பிரித்நகர், டெரிட்நகர், ராம்நகர், சாகர், பத்மா, ஜோதிநகர், பைசாகி, சோட்டா ரோபுக், பரா ரோபுக், சன்புரா, ஷிவாஜி நகர், சன்புரா ஆகியவை அடங்கும்.

சீனாவின் 'வரைபட அரசியல்' பின்னணி!

அருணாச்சலப் பிரதேசத்தை 'ஸாங்னான்' என்று அழைத்து வரும் சீனா, கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள பகுதிகளுக்குத் தன்னிச்சையாகச் சீனப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

தரப்படுத்தப்பட்ட ஆறு பெயர்களைக் கொண்ட பட்டியலை 2017-ல் முதன்முதலில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2021-ல் 15 இடங்களை உள்ளடக்கிய இரண்டாவது பட்டியலையும். 2023-ல் 11 இடங்களைக் கொண்ட மற்றொரு பட்டியலையும் வெளியிட்டது.

இந்தியாவின் எச்சரிக்கை:

சீனாவின் இத்தகைய கற்பனையான பெயரிடும் முறைகள் இரு நாடுகளுக்கு இடையேயான சுமுக உறவை மேலும் பாதிக்கும் என்றும், இந்தியாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிட 'ஸாங்னான்' என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. இந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.