இந்தியா

அரசு வேலைதான் வேண்டும் - பீகார் இளைஞர்களின் பிடிவாதத்துக்கு என்ன காரணம்?

இந்திய அளவில் 46% இளைஞர்கள் வேலையில் உள்ள நிலையில், பீகாரில் 34.3% பேர் மட்டுமே உள்ளனர். இது சராசரியை விட 11.7% குறைவு.

பீகாரில் பிபிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகள், காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளுக்கு எதிராக இளைஞர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்கள், பீகார் இளைஞர்கள் மத்தியில் அரசு வேலைகளுக்கான தேவை எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை உணர்த்தும் அதே வேளையில், அம்மாநிலத்தின் வேலைவாய்ப்புச் சந்தையில் மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மையும் வெளிவந்துள்ளது.

பிபிஎஸ்சி தேர்வுகளில் கடுமையான போட்டி

பீகாரில் அரசுப் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், அதற்காகப் போட்டியிடும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இதற்குச் சான்றாக, 67-வது BPSC தேர்வில் 802 பணியிடங்களுக்கு சுமார் 4.8 லட்சம் பேரும், 68-வது BPSC தேர்வில் 324 பணியிடங்களுக்கு சுமார் 2.6 லட்சம் பேரும், 69-வது BPSC தேர்வில் 475 பணியிடங்களுக்கு சுமார் 1.9 லட்சம் பேரும், 70-வது BPSC தேர்வில் 2,035 பணியிடங்களுக்கு சுமார் 3.3 லட்சம் பேரும், 71-வது BPSC தேர்வில் 1,298 பணியிடங்களுக்கு சுமார் 3.2 லட்சம் பேரும் என லட்சக்கணக்கானோர் கடுமையான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

வேலை தேடாத இளைஞர்கள்

பீகாரின் வேலைவாய்ப்புப் பிரச்சனை என்பது வெறும் வேலையில்லாத் திண்டாட்டம் மட்டுமே சார்ந்தது அல்ல.

சமீபத்திய காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் பீகாரின் இளைஞர் வேலையின்மை விகிதம் 12.1% ஆக இருந்தது.

ஆனால், அதைவிட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பீகாரின் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

2025 தரவுகளின்படி, இந்தியாவில் 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை 46% ஆக உள்ள நிலையில், பீகாரில் வெறும் 34.3% இளைஞர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இது தேசிய சராசரியை விட 11.7% குறைவாகும்.

ஆண்டுவாரி பணியாளர் விகிதம்

பீகாரின் ஆண்டுவாரி பணியாளர் விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 24.4% ஆகவும், 2018-19 இல் 27.6% ஆகவும் இருந்த நிலையில், 2020-21 இல் 25.7% ஆகச் சரிவடைந்து, பின்னர் 2023-24 இல் 34.6% ஆக உயர்ந்ததுடன், தற்போது 2025 ஆம் ஆண்டில் 34.3% ஆகத் தொடர்கிறது.

இதன் மூலம், பீகாரில் பல இளைஞர்கள் புதிய வேலைகளைத் தேடவோ அல்லது வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழையவோ ஆர்வம் காட்டாமல், தங்களை முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் தெளிவாக இருக்கிறது.

அரசுப் பணிகள் மட்டுமே நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், பீகாரில் பரந்த அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் இதர தொழில் வாய்ப்புகள் இளைஞர்களைக் கவராததே அவர்கள் வேலைச் சந்தையை விட்டு ஒதுங்கியிருக்க முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.