டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும் என்ற போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு, இந்தியா கூட்டணியினர், மாணவர் அமைப்புகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவித்தல், இடையில் தள்ளுமுள்ளு, போலீசாரால் அச்சுறுத்தல் என பல பிரச்சனைகள் இப்போராட்டங்களுக்கு நடுவேயும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மற்ற மாநிலங்களில் ஏதேனும் பிரச்சனை நடக்கும்போது இந்த கரப்பான்பூச்சி அமைப்பு எங்கு சென்றுவிடுகிறது? என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,
“நாட்டில் இது முதல் முறை அல்ல என்றபோதிலும், சிறப்புத் தீவிர திருத்தத்தை இந்த விதத்தில் கேள்விக்குட்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது . இதுபோன்ற மறுஆய்வுகள் பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தால் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநில அளவிலோ அல்லது மத்திய அளவிலோ எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு ஏன் இதற்கு எதிராக எந்தக் குரலும் எழவில்லை? இப்போது ஏன் இதுபோன்ற ஆட்சேபனைகள் எழுப்பப்படுகின்றன?
உங்களால் (காங்கிரஸ்) ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு ஜனநாயகத்தில் செயல்படும் அமைப்பை நீங்கள் எதிர்க்க விரும்புகிறீர்கள்.
நான் கேட்க விரும்புகிறேன்... நீங்கள் தமிழ்நாட்டிலோ அல்லது கேரளாவிலோ ஆட்சி அமைத்தால், அங்கே இதுபோன்ற ஒரு செயல்பாடு நடைபெறாதா? நீங்கள் ஆட்சி அமைக்கத் தவறிய மாநிலங்களில் மட்டுமே இந்தப் பிரச்சினை உங்களைப் பாதிக்கிறதா?
அந்த மாநிலங்களில் பிரச்சினைகள் எழும்போது இந்த கரப்பான்பூச்சி கட்சி தலைவர் எங்கே செல்கிறார்? ஏன் அங்கு சென்று போராட்டங்களை நடத்துவதில்லை? நேற்று போதைப்பொருள் தொடர்பான கொலைச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, ஏன் கரப்பான்பூச்சி பஞ்சாபிற்குச் சென்று போராட்டம் நடத்தவில்லை?
ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி மட்டுமே செயல்படும் அதன் ‘பி-டீம்’ போல ஏன் அது இயங்குகிறது?
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளில் நாட்டு மக்கள் முழு திருப்தி அடைந்துள்ளனர். நாடு முன்னேறி, உலக அரங்கில் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது. இதுதான் அவர்களைக் கவலையடையச் செய்கிறது.
இந்தியா மீது பொறாமை கொண்ட வெளிநாட்டினருடன் கைகோர்த்து, அவர்கள் (காங்கிரஸ்) நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுகின்றனர்.” என தெரிவித்தார்.
மேலும் இந்தப் போராட்டங்களால் டெல்லிக்கு “ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு” ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து நடைபெற்று வரும் உள்ளிருப்புப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.