இந்தியா

10 நாட்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வேன்: மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி

மேற்கு வங்க மாநில தேர்தலில் மம்தா பானர்ஜியை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 190 இடங்களுக்கு மேல் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக-வின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சுவேந்து அதிகாரி. கடந்த தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்கு தாவினார். அப்போது பாஜக ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

தற்போதைய தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டார். மேலும் நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டார். பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். நந்திகிராம் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார்.

அவர் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் இன்னும் 10 நாட்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வேன் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

எந்த தொகுதியை நான் தக்கவைப்பது என்பதை கட்சி முடிவு செய்யும். பபானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதி மக்களுக்கான என்னுடைய பொறுப்புடைமையை நான் மறக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்பொழுது வெற்றி ஊர்வலங்களை நடத்த வேண்டாம். அமைதியையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடியுங்கள். மே 9-க்குப் பிறகு, உரிய அனுமதி பெற்றபின் கொண்டாடுங்கள் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.