மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 142 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பாலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி அங்கு 18.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் தொகுதியும் அடங்கும்.
மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடுவதால், இந்தத் தொகுதி இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் களமாக மாறியுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமைதியாக நடக்க வேண்டிய தேர்தலை பாஜக வன்முறை மூலம் சீர்குலைக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தலில் அதிகப்படியான வெளிப்புறப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாஜகவின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுவதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.
மேலும், "வாக்குப்பதிவு பார்வையாளர்கள் வாக்காளர்களை மிரட்டுகிறார்கள். நமது மாநிலத்தைச் சேராத அதிகாரிகள் இங்கே வந்து 'தீவிரவாதிகள்' போலச் செயல்படுவது ஏன்?
நேற்று இரவு எங்கள் தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமை! இது போன்ற ரவுடிதனம் ஜனநாயகத்திற்கு அழகல்ல
தேர்தல் என்பது ஒரு ஜனநாயகத் திருவிழா, ஆனால் பாஜக அதனை வலுக்கட்டாயமாகத் திருத்த முயல்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் உயிரைக் கொடுத்தாவது ஜனநாயகத்தைக் காப்பார்கள், அவர்கள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பின்வாங்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பாலி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அங்கு லேசான மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி இருவரை கைது செய்தனர்.
அதேபோல, நடியா மாவட்டத்தில் உள்ள சப்ரா தொகுதியில் பூத் எண் 53ல் பாஜக முகவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.