இந்தியா

மேற்கு வங்கத்தில் விநோதம்: பசுக்களின் பிறப்பு சான்றிதழை கேட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.- திரிணாமுல் காங்கிரஸின் ரியாக்சன்..!

மேற்கு வங்கத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி, பிறப்பு சான்றிதழ் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரிதீய ஜனதா கட்சியின் ஹிங்கல் கஞ்ச் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வான ரேகா பத்ரா, கால்நடைகள் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தை வழிமறித்துள்ளார்.

இதையடுத்து லாரி ஓட்டுநரிடம், “14 வயதுக்கு உட்பட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

எனவே பசுக்களின் பிறப்புச் சான்றிதழை நீங்கள் எங்களிடம் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.எ. குணால் கோஷ், “இரட்டை எஞ்சின் ஆட்சி (பாஜக ஆளும் மாநிலம்) நடக்கும் உள்ள ஏதேனும் ஒரு மாநிலத்தில் பசுவிற்கு வழங்கப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வருமாறு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறோம்.

அது சான்றுகளுக்கு உதவியாக இருக்கும். பாஜகவால் அப்படி ஒரு பசுவின் பிறப்புச் சான்றிதழைக் காட்ட முடிந்தால், அந்தச் சான்றிதழ்களுக்கு யார் அங்கீகாரம் அளித்துள்ளார் என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.